Skip to main content

தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த ஆந்திரா கொள்ளை கும்பல் கைது...!  பவுன் கணக்கில் நகைகள் மீட்பு...!!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

 

கோவை கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதியில் தொடர்ச்சியாக வீடு புகுந்து திருட்டு மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்துவந்தது. அதன்பேரில் கருமத்தம்பட்டி  போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.

 

இந்நிலையில், அவிநாசி சாலையில் சென்னியாண்டவர் கோவில் அருகே நேற்று காலை வழக்கமான வாகன சோதனையில் கருமத்தம்பட்டி போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை  நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

 

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த கோட்டையா என்பவரது மகன் சீனு (20), கரீம் என்பவரது மகன் சுப்பாராவ் (20), வெங்கடேஷ் என்பவரது மகன் அங்கம்மா ராவ்  (32) மற்றும் அவரது மனைவி அங்கம்மா (28) என்பது தெரியவந்தது.

 

இவர்கள் நான்கு பேரும் கடந்த அக்டோபர் மாதம் கருமத்தம்பட்டி பகுதியில் சின்னமோப்பிரிபாளையத்தில் ஜ.டி. ஊழியர் யுவராஜ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திலும், 

 

கருமத்தம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து வரும்  அரசு ஊழியர் நாகமணி என்பவரிடமும், சக ஊழியர் ராமு என்பவரை உருட்டுக்கட்டையால் தாக்கி  6 பவுன் தங்க நகையும் பறித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து  அவர்களிடமிருந்து 24 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

மேலும் விசாரணையில், தற்போது கைது செய்யப்பட்ட கும்பலுக்கும், நேற்று முன்தினம் சூலூரில் கைது செய்யப்பட்ட 4 கொள்ளையர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் இதுபோன்று மாவட்டத்தில் வேறு எங்காவது கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா?  மேலும் எத்தனை குழுக்களாக பிரிந்து வந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கருமத்தம்பட்டி போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்