தமிழ்நாட்டில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு காவல்துறையைக் கொண்டு கஞ்சா விற்பவர்களை கைது செய்வது, அவர்களின் சொத்துக்களை முடக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர், “தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப் பொருள் விற்பனை அதிகமாகி வருகிறது. அடுத்த தலைமுறையின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மது, சூது, போதை என போய்க்கொண்டிருக்கிறது. ஆன்லைன் விளையாட்டு சூதுவை ஓரளவுக்கு கட்டுப்படுத்த அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. சட்டத்தை முழுமையாக நிறைவேற்றி அதனை கட்டுப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் போதைப் பொருட்களை உபயோகித்துவிட்டு வகுப்புக்குள் அமர்ந்திருப்பதாக ஆசிரியர்கள் நிறையபேர் சொல்கின்றனர். கல்லூரியில் மட்டுமல்ல பள்ளியிலும் இதே நிலைதான். இதையெல்லாம் நினைத்து பார்த்தாலேயே பயமாக இருக்கிறது. குறிப்பாக இந்த கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில்தான் இருக்கும். தற்போது இங்கேயும் எங்கு பார்த்தாலும் சர்வ சாதரணமாக கிடைக்கிறது. செய்தித்தாள்களில் தினமும் 100, 500 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல், ஐந்து டன் பறிமுதல் என செய்திகள் வருகின்றன. கஞ்சா தற்போது பல வடிவங்களில் வந்து கொண்டிருக்கிறது. கஞ்சா சாக்லேட், கஞ்சா பிஸ்கேட், கஞ்சா ஸ்டாம்ப் ஆகிய வடிவங்களில் வந்து கொண்டிருக்கிறது. இது அதிகளவில் இருக்கிறது. முதலமைச்சர் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நம் எதிர்காலமே நம் இளைஞர்கள் தான்.
இந்தத் துறையில் போதுமான காவலர்கள் இல்லை என பலமுறை முதலமைச்சரிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும், அறிக்கை மூலமகாவும் சொல்லியிருக்கிறேன். போதை ஒழிப்புப் பிரிவில் கிட்டத்தட்ட 20,000 காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். நிரந்தரமாக இல்லை என்றாலும், தற்காலிகமாக நியமித்து மாநிலம் முழுவதும் அவர்களைக் கொண்டு பெரும் சோதனை நடத்த வேண்டும். அப்படி செய்தால் தான் இளைஞர்களைக் காக்க முடியும். இதனை மிக முக்கியப் பிரச்சனையாக முதலமைச்சர் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.