பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை :கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான போர்வைகளைக் கொள்முதல் செய்வதில் அதிமுகவினர் பெருமளவில் முறைகேடுகளை செய்வதாக வெளியாகியுள்ள தகவல்கள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பது போன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விஷயத்தில் கூட ஆளுங்கட்சியினர் ஊழல், முறைகேடு செய்வது கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்கள் கஜா புயலால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வைகள், வேட்டி, சேலைகள், துண்டுகள் உள்ளிட்ட 27 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அப்பெட்டகத்தில் இடம் பெறும் பொருட்களை கொள்முதல் செய்து வழங்கும் பொறுப்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெட்டகத்தில் இடம் பெறும் பொருட்களில் ஒன்றான போர்வைகளை கொள்முதல் செய்வதில் தான் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக போர்வைகளை வழங்க வேண்டும் என்பதால், வழக்கமாக கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை கடைப்பிடிக்க முடியாது. கொள்முதல் செய்யப்படும் போர்வைகளுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து, அந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வருவோரிடமிருந்து போர்வைகளை கொள்முதல் செய்வது மட்டும் தான் இப்போதைக்கு சாத்தியமாகும். இதைப் பயன்படுத்திக் கொண்ட அதிமுகவினர், மலிவு விலைக்கு போர்வைகளை கொள்முதல் செய்து அரசுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பெரிய ஆலைகளில் எந்திரங்களை துடைக்கப் பயன்படுத்தும் மட்ட ரக நூலில் நெய்யப்பட்ட போர்வைகளை ஒரு பேல் 80 ரூபாய்க்கு வாங்கி நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ரூ.120க்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த ஊழலுக்கு நுகர்பொருள் வாணிபக் கழக உயரதிகாரிகளும், அமைச்சர்களும் ஆதரவாக உள்ளனர். இதனால் ரூ.100 கோடிக்கு போர்வைகள் வாங்கப்பட்டால் ரூ.33 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.
அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஊழல் செய்து பயனடைய வேண்டும் என்பதற்காக இத்தகைய கொள்முதல் முறையை அதிமுக அரசு கடைபிடிப்பதாக ஈரோடு மாவட்டம் கூட்டுறவு நெசவாளர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான கோ&ஆப்டெக்சில் கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் கூடுதலான போர்வைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் சற்று விலை கூடுதலாக இருந்தாலும் கூட தரமானவை. கோ&ஆப்டெக்ஸ் நிறுவனம் நினைத்தால் ஒரு வாரத்திற்குள் மேலும் பல லட்சம் போர்வைகளை தரம் குறையாமல் கொள்முதல் செய்து கொடுக்க முடியும். அவை அனைத்தும் கைத்தறியில் நெய்யப்படுபவை. சிறந்த தரம் கொண்டவை. வீடுகள் கூட இல்லாமல் குளிரில் தவிக்கும் மக்களுக்கு தரமான கோ ஆப்டெக்ஸ் போர்வைகளை வழங்காமல் எந்திரம் துடைக்கும் துணியில் நெய்யப்பட்ட மட்ட ரக போர்வைகளை வழங்கினால் அவை ஒரு வாரத்திற்கு கூட தாங்காது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துடிக்கின்றனர். பிற மாநில மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை அனுப்பி வைக்கின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் மொய் விருந்து நடத்தி அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் திரட்டப்படுவதைப் பார்த்த பிச்சைக்காரர் ஒருவர் தமது தட்டில் இருந்த பணத்தை அப்படியே கொடையாக கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலரும் இவ்வாறு துடிக்கும் நிலையில், அவர்களுக்கு போர்வை வாங்குவதில் ஆட்சியாளர்களின் துணையுடன் முறைகேடு செய்பவர்கள் எந்த வகையான மனிதர்களாக இருப்பார்கள் எனத் தெரியவில்லை.
ஊழல் செய்தே பழகிப்போனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விஷயத்திலாவது நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். தனியாரிடம் போர்வை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டு, கோ&ஆப்டெக்ஸ் நிறுவனத்திடம் தரமான போர்வைகளை வாங்கி மக்களுக்கு வினியோகிக்க அரசு முன்வர வேண்டும்.’’