திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமத் மற்றும் மாவட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சாலை அமைத்தல், பாதாள சாக்கடை பணிகள், குடிநீர், மின்சாரம் மற்றும் புதிய திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக இம்மாதம் 8-ம் தேதி இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து திருச்சி வந்திருந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்திற்கு வெளியே பொதுமக்கள் பகுதியில் நின்று கொண்டு இருந்த சிறுமி காவியா, ‘ஸ்டாலின் அங்கிள் என்னை படிக்க வையுங்கள்’ என்று சத்தமாக கோரிக்கை வைத்தார். இதனைக் கேட்ட முதல்வர் சிறுமியின் கோரிக்கையை கேட்டு நிறைவேற்றுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுமி காவியாவின் தாயிடம் 60,000 ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். மேலும், கோவை மாவட்டத்தில் இவர்கள் தங்குவதற்கு வீடும் அரசு வேலையும் கொடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.