Skip to main content

கலைவாணர் அரங்கத்திற்குப் புறப்பட்டார் அமித்ஷா - என்ன பேசப் போகிறார் என எதிர்பார்ப்பில் தொண்டர்கள்! 

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

amitsha on kalaivanar arangam

 

இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து, தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அவரை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், பென்ஜமின், பாண்டியராஜன், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தற்பொழுது சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கவிருக்கும் அரசு  நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டுள்ளார். அவரை வரவேற்க ஏற்கனவே முதல்வர் மற்றும் துணைமுதல்வர் அங்கு சென்றுள்ளனர். சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கியிருக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷா உடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு மேற்கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கவிருக்கும் அரசு நிகழ்ச்சியில் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தை திறந்து வைத்து, அவர் பேச இருக்கிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அவருடைய பேச்சு எதைப் பற்றி இருக்கும் என பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மாலை 6.30 மணிக்குப் பிறகு மீண்டும் லீலா பேலஸ் செல்லும் அமித்ஷா மீண்டும் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

முன்னதாக விமானநிலையத்தில் அமித்ஷாவை வரவேற்க  எடப்பாடி பழனிச்சாமி வந்தபொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசாரின் ப்ரோட்டோக்கால் சொதப்பலால் முதல்வரின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதனால் போலீஸ் கமிஷனரே நேரில் வந்து சாலையில் இறங்கி போக்குவரத்தை சரிசெய்து முதல்வர் காரை விமானநிலையம் உள்ளே அனுப்பி வைத்தார். அதேபோல் பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் கூடியிருந்து வழிநெடுக ஆரவாரத்துடன் அமித்ஷாவை வரவேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்