Skip to main content

முதல்வர் தொடங்குகிறார்... கமல்ஹாசன் உரையாற்றுகிறார்... வருகிறது 42-வது சென்னை புத்தக கண்காட்சி

Published on 29/12/2018 | Edited on 29/12/2018

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் சென்னை 42வது புத்தகக் காட்சியின் தொடங்கும் தேதி, செயல்படும் நேரம், போன்றவற்றை அறிவித்தனர். குறிப்பாக இம்முறை இணைதளம் வழியாக நுழைவு சீட்டு பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி பல புதிய அறிவிப்புகளும் வந்துள்ளது.

 

bb

 

 

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 4 முதல் ஜனவரி 20 வரை நடைபெறுகிறது. சென்னை 42-வது புத்தகக் காட்சியை முதல்வர் பழனிசாமி 4-ம் தேதி மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார். முன்னாள் கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகிறார். மேலும் கடந்த வருடம் சென்னை புத்தகக் காட்சி வாயிலில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதுபோல் இம்முறை தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படுகிறது. தமிழ்த்தாய் சிலையை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 5-ம் தேதி மாலை 4 மணிக்கு திறந்து வைக்கிறார். எப்போதும் 13 அல்லது 14 நாட்கள் நடக்கும் புத்தகக் காட்சி இந்த ஆண்டு முதல் முறையாக 17 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 10 நாட்கள், விடுமுறை நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 42-வது சென்னை புத்தகக் காட்சியில் 820 அரங்குகள் அமைய இருக்கிறது. புத்தகங்கள் 10% தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.  புத்தகக் காட்சிக்கான நுழைவுச் சீட்டினை (bapasi.com) என்ற இணையதளத்தின் மூலமாக வாங்கிக் கொள்ளலாம். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தகக் காட்சி செயல்படும். 12 லட்சம் தலைப்பில், 1 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள், புத்தகக் காட்சியில் இடம் பெறவுள்ளது.

820 அரங்குகளில் தமிழ் அரங்குகள் 487, ஆங்கில அரங்குகள் 294, மல்டிமீடியா 13, பொது அரங்கு 26 என அரங்குகள் அமையவிருக்கிறது. இதில் சுற்றுச்சூழலுக்கு என தனி அரங்குகள் அமைகிறது.

 

bb

 

 

ஆண்டுதோறும் புத்தகக் காட்சியின்போது சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், சிறந்த புத்தக விற்பனையாளர்களுக்கு பபாசி பரிசுகள் பலவற்றை வழங்கி கௌரவித்து வருகிறது. ‘பதிப்பகச் செம்மல் க.கணபதி’ விருது சிறந்த நூல் வெளியீட்டாளர்களுக்கும், பதிப்பகச் செம்மல் மணிவாசகர் பதிப்பகத்தின் திரு. மெய்யப்பன் விருது சிறந்த புத்தக விற்பனையாளருக்கும், அழ. வள்ளியப்பா விருது குழந்தைகளுக்கான சிறந்த நூல் எழுதியவருக்கு வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியின்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவியரிடம் அவர்களது பேச்சு மற்றும் எழுத்துத் திறமைகளை வெளிக்கொணர்ந்து பாராட்டும் பரிசும் வழங்கும் பொருட்டு பல்வேறு நிலைகளில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி, அவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகப் புத்தகங்களையும், கலந்துகொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்களையும் பபாசி வழங்கி வருகிறது.

 

 

bb

 

 

மக்களின் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கவும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புத்தகக் காட்சிகளின்போது தினமும் மாலை நேரத்தில் புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்களை வரவழைத்து வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்பாடுகள் செய்வதில் பபாசி மிகவும் பெருமை கொள்கிறது.

இளம் குறும்பட, ஆவணப்பட இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில் புத்தகக் காட்சியில் திரையிடத் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்புக்கு தனி அரங்கு அமைகிறது. பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில் 16-ம் தேதி நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெ.இறையன்பு, க.விஜய கார்த்திகேயன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், இயக்குநர் தங்கர்பச்சான், கரு.பழனியப்பன், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கலையரங்க நிகழ்வைச் சிறப்பிக்க இருக்கிறார்கள்.

இவ்வாண்டு முதல் முறையாக சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்விருது திருமதி திலகவதி ஐ.பி.எஸ் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. மேலும் பல விருதுகளை முதல்வர் வழங்கி கௌரவிக்கிறார். புத்தகக் காட்சியில் 15 இடங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஸ்வைப்பிங் செய்துகொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்படுகிறது. வாசகர்கள் பயன்படுத்த இலவச வைஃபை வசதி மற்றும் செல்போனுக்குத் தேவையான சார்ஜர் வசதி போதிய அளவில் செய்யப்பட்டுள்ளது.

அதிக வாசகர்களை வரவழைக்கும் விதமாக பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள், பள்ளிக் குழந்தைகள் வருகைக்காக சுமார் 5 இலட்சம் இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுள்ளன. மேலும் எல்.இ.டி டிஸ்ப்ளே ட்ரக் வாகனம் மூலம் சென்னை மாநகர் முழுவதும் கண்காட்சி குறித்து தகவலை மக்களிடம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'புத்தகம் புது பூமி’ என்ற தலைப்பில் பேசிய திரைக் கலைஞர் ரோகிணி

Published on 05/01/2024 | Edited on 05/01/2024

 

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் 47வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இரண்டாவது நாளான நேற்று அரங்கத்தில் நடைபெற்ற 'புத்தகம் புது பூமி’ என்ற தலைப்பில் திரைக் கலைஞர் ரோகிணி பேசினார். மற்றும் ‘வாழ்தல் இனிது’ பற்றி ஈரோடு மகேஷ் பேசினார். இந்த நிகழ்வில் பபாசி துணைத் தலைவர் நக்கீரன் ஆசிரியர் வரவேற்புரை வழங்கினார். அதேபோல், பபாசி செயற்குழு உறுப்பினர் அருணாச்சலம் நன்றியுரை ஆற்றினார்.

Next Story

ஈரோடு புத்தகத் திருவிழா; படைப்புகளை அனுப்ப மக்கள் சிந்தனை பேரவை அழைப்பு

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

Erode Book Festival; People's Thought Council invites to send works

 

ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடைபெறும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான 19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ளும் சிறந்த படைப்பாளருக்கு ஜி.டி.நாயுடு விருது அளிக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த விருதை பெறுவோருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என மக்கள் சிந்தனை பேரவை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து சில தினங்களுக்கு முன் மக்கள் சிந்தனை பேரவை அமைப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில், படைப்பாளர் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும் சில நிபந்தனைகளை வெளியிட்டிருந்தது. மேலும், அதில் ஐந்து தகுதிமிக்க அறிவியல் அறிஞர்களின் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு அவர்களால் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கே இந்த விருது வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்திருந்தது.

 

மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆய்வுக் கூடங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆய்வுக் கூடங்களிலோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பெயர் பெற்ற சர்வதேச அறிவியல் இதழ்களில் வெளியான தங்களது 10 கட்டுரைகளின் தலைப்புகளையும் வெளியான இதழ்கள் மற்றும் தேதிகள் குறித்த விவரங்களையும் அனுப்பி வைக்க வேண்டும். எந்த கண்டுபிடிப்புக்கு ஆய்வாளர் விருதுக்குரியவராக விளங்குகிறார் என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆய்வு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் ஜூலை 30 ஆம் தேதிக்குள் info@makkalsinthanaiperavai.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில், இன்று மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு மாவட்ட படைப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. அதில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. அந்த புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ளும் படைப்பாளிகள் தங்களது படைப்புகளை வரும் ஜூலை 20 ஆம் தேதி முதல் மக்கள் சிந்தனை பேரவை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் படைப்புகளின் பெயர் மற்றும் பிரதிகளின் எண்ணிக்கை, படைப்பாளரின் தபால் முகவரி, தொடர்பு எண், வாட்ஸ் அப் எண், மின்னஞ்சல் உள்ளிட்ட முழு விபரங்கள் அடங்கிய ஒரு கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.