தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சூரிய ஒளியிலும், அனல் மின் நிலையம் மற்றும் அணுமின் நிலையத்தின் மூலம் மின்உற்பத்தி செய்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாய நிலங்களின் வழியே உயர் மின்னழுத்த மின்கோபுரத்தை அமைத்து, பல்வேறு மாவட்டங்களின் வழியாக கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்களை அமைக்கவும், இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர், கரூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் விவசாய நிலங்களின் வழியே மின் கோபுரம் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பதால் இதுவரை 13 மாவட்டங்களில் இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டத்தில் விவசாயிகளை மிரட்டி மின்கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் பூமிக்கடியில் கேபிள் பதித்து தான் மின்சாரத்தை கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கேரளா போன்ற மாநிலங்களுக்கு ஒரு நீதி; தமிழகத்திற்கு ஒரு நீதியா? தமிழகத்தில் அனைத்து மின் கேபிள்களும் பூமிக்கு அடியில் தான் கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின்பாதைகளால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் மாநாடு வரும் மே 6ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளது.