சென்னை எழும்பூர் ரயில்வே சாலையின் ஓராமாக வெகு நாட்களாக வீடுகள் இல்லாமல் இருந்துவந்த 52 குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதனை அத்தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான பரந்தாமன் அவர்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாட்டின் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சென்னை, எழும்பூர் இர்வின் சாலை ஓரமாக வசித்துவந்தவர்கள், “எங்களையும் மனிதர்களாக பாவித்து எங்களுக்கும் வீடு வழங்கவேண்டும்” என்று அத்தொகுதி திமுக வேட்பாளரான பரந்தாமனிடம் கோரிக்கையை முன் வைத்தனர். அதன்பிறகு திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து அத்தொகுதி எம்.எல்.ஏ.வாக பரந்தாமன் தேர்வானார்.
அதனைத் தொடர்ந்து, அந்தக் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் இன்று அப்பகுதி மக்களுக்கு எழும்பூர் ராஜா முத்தைய சாலையிலுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற வீடற்றோருக்கான காப்பகத்தில் புளியந்தோப்பு கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் 52 குடும்பங்களுக்கும் எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் வீடு வழங்கினார்.
வீடு வழங்கி பேசிய எம்.எல்.ஏ. பரந்தாமன், “சென்னை முழுவதுமாக ஆங்காங்கே தெருக்களின் ஓரமாக தங்கிருந்த மக்களுக்கு திமுக ஆட்சி வந்தால் நிச்சயம் அவர்களுக்கு குடியிருப்பு வழங்கப்படும் என திமுக சார்பில் அறிவித்திருந்த நிலையில் அதில் முதல்கட்டமாக என்னுடைய தொகுதியான எழும்பூர் பகுதியைச் சார்ந்த 52 பேருக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் இன்று வீடு வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த நகர்புற அமைச்சர் தா.மோ அன்பரசு, தி.மு.க. மா.செ.க்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கு உதவி செய்தார். அவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
வீடு வழங்கப்பட்ட சந்தோஷத்தை அப்பகுதி மக்கள் ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடினர்.