விழுப்புரம் மாவட்டம், செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ளது முட்டத்தூர். இங்குள்ள பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள். நேற்று மாலை பள்ளி முடிந்து பிள்ளைகள் பள்ளியை விட்டு வெளியேறும் நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மொஃபட் வண்டியில் குல்பி ஐஸ்கிரீம் கொண்டு வந்து விற்பனை செய்துள்ளார்.
அதனை 50க்கும் மேற்பட்ட பிள்ளைகள் ஆசை ஆசையாக வாங்கி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில மணி நேரங்களில 50க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்கள் ஊர்களில் இருந்து குழந்தைகளை அவசரமாக கொண்டு வந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இப்படி பல பிள்ளைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கு காரணம் குல்பி ஐஸ்கிரீம் தான் என்று பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து விக்கிரவாண்டி தாசில்தார் மருத்துவமனைக்குச் சென்று குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதை நேரில் ஆய்வு செய்தார்.
இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் மருத்துவக் கல்லூரி டீன் கீதாஞ்சலி ஆர்.எம்.ஓ. ரவிக்குமார் மற்றும் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றி உள்ளனர். மேலும், இது குறித்து உணவுத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகிறார்கள்.