பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆர்.பி.உதயகுமார்
பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மீட்பு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தலைமை செயலாளர் தலைமையில் அனைத்து துறை செயலாளர்களும் இது சம்பந்தமாக ஆய்வு கூட்டம் நடத்தி உள்ளனர்.
கனமழை பெய்யும் போது பாதிக்கப்படும் பகுதிகள் எவை? எவை? என முன் கூட்டியே கண்டறியப்பட்டு அங்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதற்கான மீட்பு பணிக்கு தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மழை காலங்களில் மக்களை தங்க வைக்க 3172 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும் கட்டப்பட்டு வருகிறது. மழை நிவாரண மீட்பு பணிகளுக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
மதுரையில் நேற்று பெய்த பலத்த மழையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலங்களில் குடிநீரில் அதிக அளவு மாதிரிகள் எடுத்து தேவையான குளோரின் கலக்கவும் அறிவுறுத்தி உள்ளோம். மழை தண்ணீரை ஏரி குளங்களில் எந்த அளவு சேமிக்க முடியுமோ அதை மேற்கொள்ளுமாறு வருவாய்த்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
முன்னதாக மழை காலம் தொடங்குவதையொட்டி சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை, ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
படம்: அசோக்குமார்