
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று கொண்டு வரும் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியான அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றன. கரோனா காலத்தில் போதுமான முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை என்று திமுக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது. மேலும் இந்தி திணிப்பு, நீட் விவகாரம், புதிய கல்வி கொள்கை, வேளாண் மசோதா போன்ற விவகாரங்களில் மத்திய அரசு மீதும் திமுக அதிருப்தி தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசவும், கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் திமுக தலைமையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.