கடலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் தெய்வ. பக்கிரி (அ.தி.மு.க) தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் ம.அய்யனார் (தே.மு.தி.க), வட்டார வளர்ச்சி அலுவலர் ந.சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும், மழை வெள்ள பாதிப்புகளின் போது உணவு வழங்கியது, பிளிச்சீங் பவுடர் வாங்கியது ஆகியவற்றில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் போது அ.தி.மு.க கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினரின் தலையீட்டால் பணிகள் ஒதுக்கப்படுவதில்லை என்று கூறி அ.தி.மு.க கவுன்சிலர் ராமசாமி குற்றம் சாட்டி, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
இதேக் கருத்தை வலியுறுத்திய பா.ம.க கவுன்சிலர் த.முரளி, தீர்மான நகல்களை கிழித்து எறிந்ததோடு, பா.ம.கவினரின் வார்டுகளும் புறக்கணிக்கப்படுவதாக கூறி வெளிநடப்பு செய்தார். அவருடன் பா.ம.க. உறுப்பினர்கள் கே.ஜெயராமன், ஞானசௌந்தரி துரை ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து தே.மு.தி.க கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது தி.மு.க கவுன்சிலர் சண்.கார்த்திகேயன் பேசுகையில், "ஊராட்சி ஒன்றியத்திற்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அந்த நிதியை முறையாக செலவு செய்யாமல் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தலைவர் நடந்து வருகிறார்" என்று குற்றம்சாட்டி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் தலைவரைக் கண்டித்து தி.மு.க வெளிநடப்பு செய்வதாக கூறினார். அவரைத் தொடர்ந்து மற்ற தி.மு.க கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வி.சி.க கவுன்சிலர்கள் ஜெயாசம்பத், சுபாஷினி சீனுவாசன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையில், 15வது நிதிக்குழுவில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்படாமல் பல்வேறு பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்கொண்டுள்ளதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் கூறி அ.தி.மு.கவை சேர்ந்த டி.எஸ்.ஆர்.மதிவாணன், வி.வேல்முருகன், கிரிஜாசெந்தில்குமார் உள்ளிட்ட கவுன்சிலர்களும், துணைத்தலைவர் (தே.மு.தி.க) ம.அய்யனாரும் வெளிநடப்பு செய்தனர்.
இதனால், தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் மட்டுமே கூட்டத்தில் அமர்ந்திருக்க மற்ற அனைத்துக கவுன்சிலர்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் நடைபெறவில்லை.