தமிழ் புத்தாண்டிற்காக தமிழக ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்திருக்கும் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பேசினார். அப்பொழுது, ''ஒரு அரசு பொறுப்பிலிருந்து கொண்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாதது உண்மையிலேயே தமிழர்கள் அத்தனை பேருமே வேதனைப்படக்கூடிய ஒரு செயல். தமிழ் உணர்வு கொண்ட அத்தனை நெஞ்சங்களில் ஈட்டி பாய்ந்தது போல இருந்தது திமுகவின் செயல். இது அவருடைய குடும்ப நிகழ்ச்சி அல்ல, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேநீர் விருந்து அளிக்கிறார். தமிழ் உணர்வு உள்ளவர்கள், தமிழ் காக்கப்படவேண்டும், தமிழ் போற்றப்படவேண்டும், வளர வேண்டுமென்ற வகையில் எண்ணம் உள்ளவர்கள் நிச்சயமாக இதில் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால் தமிழை வைத்து வியாபாரம் செய்து, ஆட்சியில் இருக்கும்போதும் சரி இல்லாதபோதும் சரி அவர்களுக்கு வந்து தொய்வு ஏற்பட்டால் உடனடியாக எடுக்கின்ற ஆயுதம் தமிழினம், தமிழர்கள் என்பது தான்.
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு காலியாகி விடும் என்று சொன்னார்கள், நீட் தேர்வை நீக்கும் சூட்சமம் எங்களுக்கு தெரியும் என்றெல்லாம் சொன்னார்கள். 17 வருஷமாக மத்திய ஆட்சியிலிருந்த திமுக ஏன் மாநிலப் பட்டியலில் கல்வியை சேர்ப்பதற்கு உண்டான நடவடிக்கையை எடுக்கவில்லை. இதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய ஒட்டுமொத்த கேள்வி. 17 வருடத்திற்கு முன்னாடியே மாநிலப் பட்டியலில் கல்வி சேர்த்திருந்தால் இதெல்லாம் நமக்கு நீட் ஒரு பிரச்சனையாகவே ஆகியிருக்காது. நீட் கொண்டு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள் இவர்கள் தான். கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவராமல் விட்டவர்களும் இவர்கள்தான். எங்களுக்கு பதவி பெரிதல்ல மாநிலத்தின் உரிமைகள் என்ற எண்ணத்தில்தான் செல்கிறோம். மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசு நிலைநாட்ட தவறினால் உடனே நாங்கள் அந்த பதவியைத் தூக்கி எறிகிறோம். எங்களைப் பொறுத்தவரை பதவி என்பது, அண்ணா சொல்வார் 'தோளில் போடும் துண்டு' என்று. அதைவிட ஒரு படி மேலே போய் சொல்கிறேன் பதவி என்பது எங்களுக்கு ஒரு கர்சீஃப் மாதிரி'' என்றார்.