அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் தலைமை தாங்கினார். இந்த முற்றுகை போராட்டத்தில், "தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணி இடங்களைத் தமிழக இளைஞர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். பகத்சிங் தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சிறு மற்றும் குறுந் தொழில்களைத் தொடங்க இளைஞர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட குழுவினர் பேரணியாக வந்து திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.