ஊத்தங்கரை அருகே, மது போதையில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளியை அடித்துக்கொன்ற கூட்டாளிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). ஊத்தங்கரை ஊமையனூர் அருகே பெரிய தள்ளபாடியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்துவந்தார்.
இவருக்கு மனைவி, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். செவ்வாய்க்கிழமை (24.08.2021) அன்று மாரியப்பன், சின்னதாளப்பட்டி புளியந்தோப்பு பகுதியில் சடலமாகக் கிடந்தார். அவருடைய உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.
அந்த வழியாகச் சென்றவர்கள், இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர். உடற்கூராய்வுக்காக சடலத்தை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மாரியப்பன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆக. 24ஆம் தேதி, சடலம் கிடந்த இடத்தில் மாரியப்பன் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் எல்லை மீறிய கைகலப்பால் ஆத்திரமடைந்த கூட்டாளிகள், மாரியப்பனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதையடுத்து கூட்டாளிகள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாரியப்பனின் கூட்டாளிகள் மூன்று பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரித்துவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.