சாலையோர மற்றும் தெருக்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை முழுமையாக அனுமதிக்க வேண்டும்; தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சட்டம் மற்றும் விதிகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தெரு வியாபாரிகள் ஆகியோரது நிலையை அரசு பரிசீலித்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படும் நிலையில், முன்பு வியாபாரம் செய்த இடங்களிலேயே தெரு வியாபாரிகள் முழுமையாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
2014ஆம் ஆண்டு மத்திய சட்டத்தின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சட்டம் மற்றும் விதிகளை அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து அனைத்து தெரு வியாபாரிகளுக்கும் வியாபாரச் சான்று மற்றும் பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி அவர்களை வாக்காளர்களாக கொண்டு வணிக குழுவிற்குத் தேர்தல் நடத்திட வேண்டும், வணிகக்குழு அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பழக்கடை மற்றும் தெரு வியாபாரிகள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.