அ.தி.மு.க. வளர்ச்சியில் தன்னுடைய பங்கும் உள்ளது என்றும், அதற்காக பெருமை கொள்வதாக நடிகை லதா கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நடிகர்கள் ரஜினியும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்திருப்பதை நான் வரவேற்கிறேன். போக, போக அவர்களின் செயல்பாட்டை வைத்து தான் அவர்களை ஏற்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். இரட்டை இலை சின்னம் உள்ள அ.தி.மு.க.வில் நான் நீடிக்கிறேன். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் எனக்கு அ.தி.மு.க.வில் பதவி வழங்குவதாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கூறி உள்ளனர். அப்படி வழங்கினால் நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய காலத்தில் மிகுந்த நிதி பற்றாக்குறையால் கஷ்டப்பட்டார். அப்போது ஈரோடு, தேனி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். தலைமையில் நாட்டிய நாடகம் நடந்தது. இதில் நான் கலந்து கொண்டு நாட்டியம் ஆடினேன்.
இதன் மூலம் ரூ.35 லட்சம் நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியை கொண்டு தான் அ.தி.மு.க. கடந்த 1977–ம் ஆண்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது. இதனால் அ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கும் உள்ளது. இதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.இவ்வாறு கூறினார்.