Published on 12/07/2021 | Edited on 12/07/2021

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு தமிழகத்தில் சில நாட்களாக கொங்கு நாடு தொடர்பான விவாதத்தை பாஜகவை சேர்ந்த சிலர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். இதற்கு மற்ற கட்சியினர் கடும் பதிலடிகளைக் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பாஜகவினருடைய இந்த பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில், இதுதொடர்பாக பேசிய திமுக எம்பி கனிமொழி, "தமிழகத்தைப் பிரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, " கொங்கு நாடு போன்ற பேச்சுக்களைப் பேசி பிரிவினை விதையை விதைக்க வேண்டாம்" என்று பாஜகவினரை கேட்டுக்கொண்டுள்ளார்.