பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி, இன்று (30/10/2022) காலை முதல் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை திருநகர் பகுதியில் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுகவை சேர்ந்த ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''இந்த திருநகர் பூமியிலிருந்து அவருக்கு மரியாதை செலுத்துகின்ற வாய்ப்பு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இங்கே இருக்கிற அறக்கட்டளையின் சார்பாக நல்வாழ்த்துக்கள். குறிப்பாக முத்துராமலிங்க தேவர் முகவை (ராமநாதபுரம்) மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் தன் வாழ்நாள் முழுவதையும் மதுரை மாவட்டத்திலே கழித்தார். தொடர்ந்து பசுமலை உயர்நிலைப் பள்ளியிலும் அதேபோல் இந்த திருநகரில் இருக்கக்கூடிய இல்லத்திலும் வாழ்ந்து காட்டி, தென் மாவட்ட பகுதிகளுக்கு ஒரு தியாக தீபமாக, சுதந்திரப் போராட்ட வீரராக பல்வேறு பொதுப்பணிகளை ஆற்றிய அவரை என்றென்றைக்கும் மறக்க முடியாது என்ற உணர்வோடு தான் அவரை வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
அதிமுகவின் சார்பாக ஜெயலலிதா அன்று கமுதியில் இருக்கக்கூடிய தேவர் சிலைக்கு தங்க அங்கியை வழங்குகின்ற ஒரு அற்புதமான நிகழ்வு நடந்தது. தொடர்ந்து இந்த இடத்திற்கு கூட பல்வேறு பிரச்சனைகள் வரும் பொழுது அதிமுக காவலாக, துணையாக இருந்துள்ளது. அதிமுக முத்துராமலிங்க தேவருக்கென தனி அங்கீகாரத்தை வைத்திருக்கிறது. அந்த சமுதாய மக்களும் அதிமுக மீது பற்று கொண்டவர்களாக இருக்கிறார்கள். எல்லா கட்சிகளையும் விட எம்ஜிஆர் காலத்திலிருந்து மரியாதை செலுத்துவது என்றால் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அதிமுக தான். அதை யாரும் மறுக்க முடியாது'' என்றார்.