மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டின்றி தேர்வாகினர். இதில் பல்வேறு இடங்களில் திமுக- அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக-திமுகவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
மொத்தம் 15 வார்டுகளை கொண்ட கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் 8 வார்டுகளில் அதிமுகவும், 7 வார்டுகளில் திமுகவும் வெற்றிபெற்றது. அதிமுக-திமுக இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அங்கு சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டதால் மறைமுக தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரி பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் போத்தனூர் காவல்நிலையத்தில், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடமால் தடுத்தது, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.