![AIADMK did patchwork on the banner on MGR Birthday](http://image.nakkheeran.in/cdn/farfuture/tWpAslS4deTg0kecOxbQZvlB6MZj4PKyTXUeYmzEvZ4/1705478442/sites/default/files/inline-images/banner-ni.jpg)
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று (17-01-24) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு அதிமுக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஏராளமான நிகழ்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பேனர் வைத்திருந்தனர். அதில் ஒரு பேனர் மட்டும் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த பேனரில், எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு பதிலாக, தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த்சாமியின் புகைப்படத்தை அச்சடித்திருந்தனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, அரவிந்த்சாமியின் புகைப்படத்திற்கு மேல் எம்.ஜி.ஆரின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பேனர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், பேனரில் பேட்ச் ஒர்க் செய்த அதிமுகவினர் என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.