தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. ஆளுநரின் இச்செயலுக்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவெடுக்க சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. மொத்தம் 13 சட்டமன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இந்தக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று தமிழக பாஜக சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இக்கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று நேற்று தெரிவித்தார்.
இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுகவும் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இக்கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்ற காரணத்தை விரைவில் அறிக்கையாக வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.