கடந்த 2021-2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் சமர்பித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், தொழில் வளர்ச்சியில், பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, தருமபுரி, நெல்லை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
திருவண்ணாமலை அடுத்த பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் அமைக்க முடிவு செய்த வருவாய்துறை, தொழில்துறை அதிகாரிகள், கடந்த டிசம்பர் மாதம் பாலியப்பட்டு, புனல்காடு, செல்வபுரம், வாணியம்பாடி, அண்ணாநகர், அருந்ததியர் காலணி பகுதியை வந்து பார்வையிட்டுள்ளனர். 6 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் உள்ள 1200 ஏக்கர் விவசாய நிலங்களை சிப்காட் அமைக்க கையகப்படுத்த முடிவு செய்து வரைப்படம் தயாரித்துள்ளார்கள். இந்த தகவல் இந்தப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. இந்த பகுதியின் விவசாய நிலங்கள் பொன்விளையும் பூமி என அழைக்கப்படும் பகுதி. தண்ணீர் அதிகம் பயன்படுத்தப்படும் நெல், மணிலா பயிரோடு, பூ பயிர் அதிகம் செய்யப்படும் கிராமங்கள் இவை. அப்படிப்பட்ட விவசாய நிலங்களை தொழிற்சாலை அமைக்க கையகப்படுத்த முடிவு செய்வதை எதிர்த்து போராட்டத்தை துவங்கினர்.
இம்மக்களின் போராட்டத்துக்கு சி.பி.எம், பாமக, நாம்தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பு, மே17 இயக்கம் போன்ற சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன் தலைவர்கள் களத்துக்கு நேரடியாக வந்து அம்மக்களிடம் பேசி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மார்ச் 31ஆம் தேதியோடு போராட்டம் தொடங்கி 100 வது நாளானதால் பாலியப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரை சந்தித்து மனு தருவதற்காக வருகை தந்திருந்தனர். நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் ஆண்கள், பெண்கள் என வருகை தந்திருந்தனர். அவர்கள் வெள்ளரி பழம், சாமந்தி பூ, மல்லிப்பூ, நெல் போன்றவற்றை தட்டில் வைத்து கொண்டு வந்தனர்.
இவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலேயே டி.எஸ்.பி அண்ணாதுரை தலைமையில் குவிக்கப்பட்டிருந்த 50க்கும் அதிகமான போலீஸார் தடுத்து நிறுத்தினர். “எங்கள் அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும், எங்கள் வாழ்வாதார பிரச்சனைக்காக கலெக்டரை சந்திக்க வந்துள்ளோம்” என கோஷமிட்டனர். அவர்கள் நுழைவாயிலேயே சுட்டெரிக்கும் வெய்யிலில் தரையில் அமர்ந்தனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை உள்ளே அனுமதித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் உதவி ஆட்சியர் இருவரும் கீழே வந்து அம்மக்களை சந்தித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக எங்கள் பகுதியில் சிப்காட் அமைக்ககூடாது என்கிற மனுவை தந்தனர். சுமார் 265 மனுக்கள் தரப்பட்டது.
வேளாண்மைத்துறை பட்ஜெட் தாக்கலின்போது, விவசாய நிலங்கள் கையகப்படுத்தமாட்டாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் பேச்சுக்கு முக்கியத்துவம் தந்து பொன்விளையும் பூமியான எங்கள் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தவர்கள், அதை அறிவிக்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.