ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மாநில விருது கடலூரை சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் 9 வயது மாணவி பவதாரணிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பெண்கள் பாதுகாப்பு தினத்தன்று வழங்கப்பட்டுள்ளது.
பெண் கல்வி விழிப்புணர்வு, வாக்காளர் விழிப்புணர்வு, பிளாஸ்டிக் விழிப்புணர்வு, இரத்ததான விழிப்புணர்வு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, புற்றுநோய் விழிப்புணர்வு, செல்போன் விழிப்புணர்வு, யோகா விழிப்புணர்வு என பல விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார் பவதாரணி.
இளம் வயதில் செய்த சமூக விழிப்புணர்வு பணிகளுக்காக குழந்தை சமூக செயல்பாட்டாளருக்கான அன்னை தெரசா விருது, போலியோ சேவைக்கான விருது, 2015 பெருமழை வெள்ளம் நிவாரண பணிகள் சேவை விருது என பல்வேறு விருதுகளையும் இந்த வயதில் பெற்றுள்ளார் பவதாரணி.
சமூக சேவையில் ஆர்வம் உடைய பவதாரணி செஸ், நீச்சல், வில்வித்தை, பரத நாட்டியம், ஓவியம், கேரம்போர்டு, பொம்மலாட்டம், நடனம் ஆடல் பாடல் என பல தனித் திறமைகளையும் வளர்த்துக் கொண்டு வருகிறார். இவைகளிலும் பங்கேற்று பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார்.
இவரது தந்தை சண்முகம் பள்ளியில் படிக்கும்போதே நாட்டு நலப்பணித்திட்டத்தில் இணைத்துக்கொண்டு சேவைகளை செய்துள்ளார். படிப்பை முடித்தவுடன் நேரு யுவகேந்திராவில் தன்னார்வத் தொண்டராக தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ந்து 2001-இல் இருந்து பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். தந்தையின் சமூகப் பணிகளை பார்த்து தானும் சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று முழு ஈடுபாட்டுடன் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறுகிறார் பவதாரணி.
துளிர்க்கின்ற போதே தொண்டாற்ற வேண்டும் என்கிற தூய மனம் கொண்ட பவதாரணி நாமும் வாழ்த்துவோம்.