வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாடின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதில், சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் சாய்ந்த மரங்களை அக்கல்லறையில் பணி செய்யும் ஊழியரான உதயகுமார் என்பவர் அப்புறப்படுத்தும் பணியில் இருந்தபோது, அங்கு அவர் மயங்கி விழுந்தார். இதுகுறித்தத் தகவல் டி.பி.சத்திர காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்காவல் நிலையத்தின் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அங்கு விரைந்து சென்று அவரை தன் தோளில் தூக்கி சுமந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி அங்கிருந்த இருவரை அவருடன் அனுப்பிவைத்தார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்திருந்தனர். அது சமுகவலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து இன்று (12.11.2021) காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவல் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழையும் அளித்தார்.
இந்நிலையில் வழக்கறிஞர் வே.பாலு, அந்த ஆய்வாளரின் செயலைப் பாராட்டி ஒரு கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதை பின்வருமாறு.
யாரம்மா நீ?
விழி பிதுங்கி,
நுரைதள்ளி,
மொத்தக்கண்ணீரும்
மழை நீரோடு கலக்க
ஒரே ஒரு செயல்..
கடமை கடந்து,
கருப்பை சுமப்பவள்
நீ .. என்பதை
மரணம் தொட்ட
மனிதனை
அன்னையாய் சுமந்த
உன் தோளுக்குள்
அத்தனை தீரமா?
இல்லை அம்மா,
மழை நீரையும்
மிஞ்சிய ஈரம்!!!
உன்னைச்சுற்றி
அத்தனை ஆண்கள்...
அதனாலென்ன?
யாரோ பெற்ற பிள்ளை
என நீ எண்ணாமல்,
உன் பிள்ளை போலசுமந்து நடந்த
அழகு.. சோகத்தில்
ஒரு சுகம்...
ஒருவேளை உன் போன்றோரை
ஊரறியச் செய்யவே
இயற்கை
இப்படியும் வாட்டுமோ?
அதிலும்
வண்டியில் ஏற்றும் வரை
நீ காட்டிய நிதானம்..
ஏற்றிய பின் சொல்லும்
ஒற்றை வார்த்தை..
'போ சீக்கிரம் போ. எப்படியாவது காப்பாற்று'
அம்மாக்களுக்கு மட்டுமே
அமைவது!
அவனைப்பெற்ற அம்மா
பார்த்தால்,
அவள் கருப்பை
உன் கால் தொழும்!!
காவல்துறைக்குள்
இன்னமும் இப்படி
சில கருணை இதயங்கள் இருப்பதால்தான்..
சிலவேளை
கைகூப்பித் தொழுகிறோம்.
நீங்களெல்லம்
இருப்பதால்தான்
நாங்களும் 'இருக்கிறோம்'
உனது செயல் கண்டோ நாணிக்
கடந்தது மழை?
யார் கடவுள்?
இதோ இந்த
ராஜேஸ்வரி தோளில்தான்
ஈசனும், யேசுவும், அல்லாவும்.....
- வழக்கறிஞர் வே. பாலு.