தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுதும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த எதிர்ப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை கூற தமிழக அரசு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் சந்திப்பு ஒன்றை நாளை சட்டப்பேரவை வளாகத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. சிறுபான்மையினரிடையே நிலவும் சந்தேகங்களை களைவதற்கான கூட்டம் இது என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை கூற தலைமைச் செயலாளர் சண்முகம் அழைப்புவிடுத்துள்ளார்.