அமைச்சர் துரை முருகனை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற நீர்வளத் துறை மானியக் கோரிக்கையின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உரையாற்றும் போது, “என்னை பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலம் எங்கள் கட்சியில் இருந்தவன் நான். இன்னும் இருக்கப் போகிறவன். என்றைக்காவது ஒருநாள் மறையப் போகிறவன். மறைந்துவிட்ட அன்றைக்கு எனக்கென்று எடுக்கிற சமாதியில், ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என்று ஒரு வரி எழுதினால் போதும். என் தலைவர் கலைஞரின் கோபாலபுரத்து விசுவாசியாக வாழ்ந்தேன். இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று பேசி இருந்தார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சிலர் அமைச்சர் துரை முருகனின் புகைப்படத்தை கல்லறையில் உள்ளது போன்று தவறாக சித்தரித்ததுடன் சில வாசகங்களையும் குறிப்பிட்டு அவதூறாகப் பரப்பி உள்ளனர். இதனைக் கண்ட வேலூர் மாவட்ட திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இவ்வாறு அவதூறு பரப்பியது பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக சமூக வலைத்தளப் பிரிவைச் சேர்ந்த 20வது அணி செயலாளர் அருண்குமார் என்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.