வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. இந்நிலையில் வருகின்ற 7-ஆம் தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என அ.தி.மு.க தலைமை அறிவித்திருந்தாலும் அமைச்சர்கள் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்திக்கும் பொழுது தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று திண்டுக்கலில் செய்தியாளர்களைச் சந்தித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் பற்றி பேசியது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முதல்வரும் துணை முதல்வரும் நன்றாகப் பேசிக் கொள்கின்றனர். வரும் அக்டோபர் 7ம் தேதி அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.
முதல்வரும் துணை முதல்வரும் பேசிக்கொள்ளவில்லை என்பவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும். துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டதால் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்ட விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்கவில்லை. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு யதார்த்தவாதி எனவே யதார்த்தமாக அவ்வாறு கூறியுள்ளார் என்றார்.