தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு, ரொம்பவே தாராள மனசுதான்! காங்கிரஸ்காரராக இருந்தாலும், திமுகவைச் சேர்ந்தவராக இருந்தாலும், நிலைமை அறிந்து, வீடு தேடிச்சென்று ரூ.1 லட்சம் நிதியுதவி செய்வார். சில தினங்களுக்கு முன், ஆதரவற்ற பெண் ஒருவருக்கு சுயதொழில் செய்வதற்கும்கூட ரூ.1 லட்சம் தந்துள்ளார். கரோனா பாதிப்பால் இறந்த போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கும், லட்சங்களில் நிதியளித்திருக்கிறார்.
இப்படி உதவி செய்வதும்கூட, சில நேரங்களில் சர்ச்சை ஆகிவிடுகிறது. “சொந்தக் கட்சிக்காரங்க (அ.தி.மு.க) எத்தனையோ பேரு கஷ்டப்படறாங்க.. இவரு என்னடான்னா.. எந்தெந்த கட்சிக்காரங்களுக்கோ, யார் யாருக்கோ பணத்த தூக்கிக் கொடுக்கிறாரு..” என்ற விமர்சனம் எழும். அதையும் ராஜேந்திரபாலாஜி, காதில் வாங்கிக்கொள்வார்.
சிவகாசி – பள்ளபட்டி பஞ்சாயத்தில் உள்ள முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த முருகன், அ.தி.மு.க கட்சிக்காரர். இவருடைய மகன் கார்த்திகேயனும் மருமகள் முத்துமணியும், விபத்தினால் படுகாயமுற்றனர். கார்த்திகேயனுக்கு கால்முறிவு ஏற்பட்டு, எழுந்து நடக்க ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதனால், அவ்விருவரது வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது. இதைக் கேள்விப்பட்ட ராஜேந்திரபாலாஜி, கார்த்திகேயன் வீட்டிற்கே சென்றார். ஆறுதல் கூறியதுடன், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சத்தை வழங்கவும் செய்தார். முத்துமணிக்கு, அரசு வேலை கிடைப்பதற்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதியளித்திருக்கிறார்.
பயணத்தின்போது, எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் கேட்பதை வழக்கமாகக் கொண்டவர், ராஜேந்திரபாலாஜி. அதுவும், எம்.ஜி.ஆர். நடித்த 'படகோட்டி' திரைப்படத்தின், குறிப்பிட்ட பாடல் வரிகளை, அடிக்கடி முணுமுணுப்பார். அந்த வரிகள் இவைதான் -
"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்..
அவன் யாருக்காக கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான்.. இல்லை..
ஊருக்காக கொடுத்தான்.
எதுவந்தபோதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்!"
திரைப்பட பாடல் வரிகளில் இன்றும் வாழ்கிறார் எம்.ஜி.ஆர்.; நலிந்தோரை வாழவும் வைக்கிறார்!