கரோனா வைரஸ் ஊரடங்கு அறிவித்த பிறகு தமிழக அரசு மக்களுக்கு நிவாரண நிதியாக அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்து அதன்படி மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி இரண்டாம் கட்டமாகவும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதன் பிறகு மீண்டும் தமிழக அரசு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி கொடுப்பதாக அறிவித்தது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி மக்களுக்கு போதாது என்றும் கூடுதலாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. பொதுமக்கள் மத்தியிலும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி போதாது, மேலும் கூடுதலாக கொடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் கொடுக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் இன்று ஈரோடு மாவட்டம் பவானியில் தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பு உபகரணங்கள் மற்றும் அவர்களுக்கு முட்டை உள்ளிட்ட பொருள்களை கொடுத்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இதுவரை இரண்டு கட்டமாக 1000 ரூபாய் மக்களுக்கு கொடுப்பதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் என அரசு திட்டமிட்டிருக்கிறது. கூடுதலாக ஆயிரம் ரூபாயும் நாங்கள் கொடுப்போம்.
ஆனால் மத்திய அரசிடமிருந்து அதாவது டெல்லியிலிருந்து பணமே வரவில்லை. மத்திய அரசு பணம் கொடுத்தால் விரைவாக கொடுக்க வசதியாக இருக்கும். தமிழக அரசு விரைவில் இதற்கான அறிவிப்பை கொடுக்கும். ஆனாலும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. அங்கிருந்து பணம் வந்தபிறகு மக்களுக்கு பணம் ஆயிரம் கொடுக்கப்படும்" என்றார்.
தமிழக அரசு முறையான எந்த அறிவிப்பையும் கொடுக்காமல் இருக்கும்போது, ஒரு அமைச்சர் தன்னிச்சையாக மேலும் ஆயிரம் கொடுப்போம் என கூறியிருப்பது ஆளுங்கட்சி மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.