சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானத்திற்காக அமைக்கப்பட்ட தீர்மானக் குழுவுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ப.வளர்மதி, பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வைத்திலிங்கம், சி.வி.சண்முகம், வைகைச்செல்வன், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஜெ.சி.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இதில், வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற உள்ள கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் உள்ளிட்டவைக் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றனர். ஒற்றைத் தலைமை குறித்த ஜெயக்குமார் பேட்டியால் பிரச்சனை ஏற்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியிருந்த நிலையில், ஆலோசனையில் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.
முன்னதாக, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், கட்சி அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வராத நிலையில், தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனிடையே, கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் வந்த பெரம்பூர் பகுதிச் செயலாளர் மாரிமுத்துவைத் தொண்டர்கள் தாக்கினர். இதனால் ரத்த காயத்துடன் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய அவர், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து பேசினார்.