அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
கடந்த வாரம் சனிக்கிழமை (25/01/2020) அன்று அதிகாலை 04.00 மணிக்கு சூலூரைச் சேர்ந்த காவலர்கள் 10- க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் முடிவில் அவரை கைது செய்த காவல்துறையினர், சூலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அதிமுக பெயரில் போலி இணையதளம், உறுப்பினர் சேர்க்கை நடத்தியதாக கே.சி.பழனிச்சாமி மீது 17 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் கே.சி.பழனிச்சாமியை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது 15 நாள் (பிப்ரவரி 7 ஆம் தேதி வரை) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கே.சி.பழனிச்சாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கே.சி.பழனிசாமி தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சூலூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.