கீழக்கரை நகராட்சி, உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 14வது வார்டில் அதிமுக வேட்பாளர் அப்துல் ரஹீம் மற்றும் 15வது வார்டில் அதிமுக சார்பில் அவரது மனைவி ஜன்னத்துல் பிர்தெளஸ் ஆகியோர் போட்டியிட்டனர். அப்போது ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது அதிமுக வேட்பாளர் ஜன்னத்துல் பிர்தெளஸ், ஒருவர் கள்ள ஓட்டு போடுவதாக கூறி அங்கிருந்த அனைத்து சமுதாய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இலியாஸிடம் புகார் தெரிவித்துள்ளார். அதே வார்டில் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் சார்பிலும் வேட்பாளர் போட்டியிடுகிறார். புகார் கூறிய அதிமுக வேட்பாளர் ஜன்னத்துல் பிர்தெளஸை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இலியாஸ் ஒருமையிலும் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த அதிமுக வேட்பாளரின் கணவர் அப்துல் ரஹீம் இலியாஸிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி இலியாஸை கீழே தள்ளியதாக இலியாஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி அனைத்து சமுதாய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இலியாஸின் ஆதரவாளரான நசுருதீன் கூறியதாவது, “அதிமுக வேட்பாளரின் கணவர் ரஹீம் காலை வாக்குப்பதிவு ஆரம்பித்ததிலிருந்தே தேவையில்லாமல் பேசுவது, எங்களை வம்புக்கு இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார். பொறுமைக்கும் எல்லை உண்டு அதையும் மீறி வயதில் பெரியவர் என்றுகூட பாராமல் இலியாஸை நெஞ்சில் கை வைத்து தள்ளியதால் தேவையில்லாத சம்பவம் நடைபெற்றது” என்றார்.
இதையடுத்து இலியாஸ் மற்றும் அசாருதீன், நசுருதீன், ஜெரால்டு, சகாயம் உட்பட ஆதரவாளர்கள் அதிமுக வேட்பாளர் மற்றும் அவரது மனைவி இருவரையும் கடுமையாக தாக்கியதில் அவர் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுபற்றி கீழக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் பாலமுரளி கிருஷ்ணா அதிமுக வேட்பாளரை தாக்கிய 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.