அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்பது பற்றி எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்று பெற்றோர் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் ஜூலை 28 அன்று ஆன்லைன் வகுப்புக்கான நெறிமுறைகள், பள்ளிகள் திறப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 29) செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்ததோடு தனியார் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.