சினிமா துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உண்டு என்று நடிகை ஜனனி அய்யர் சேலத்தில் கூறினார்.
சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 28, 2018) நடந்தது. நடிகர் பாலாஜி, நடிகை ஜனனி அய்யர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஜனனி அய்யர் செய்தியாளர்களிடம் கூறியது:
பாலியல் தொந்தரவு விவகாரம் 'மீடூ' இயக்கம் மூலமாக வெளியே பேசப்பட்டு வருகிறது. இது ஓர் ஆரோக்கியமான விஷயம். இதை, ஊடகங்கள் வழக்கம்போல் ஒரு செய்தியாகக் கருதாமல் நல்ல விதமாக பார்க்க வேண்டும். பெண்கள் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
சினிமா துறை மட்டுமின்றி, ஐடி உள்பட பல்வேறு துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் உள்ளன. சினிமாத்துறை என்பதால் இந்த விவகாரம் பெரியளவில் பேசப்படுகிறது.
பாதிக்கப்படும் பெண்கள், 6 மாதம், ஒரு வருடம் என காலதாமதம் செய்யாமல் உடனடியாக அதைப்பற்றி வெளியே கூற வேண்டும். அவ்வாறு தெரிவித்தால், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் ஏற்படும். அதேசமயம், இந்த 'மீடூ' வாய்ப்பை பெண்கள் தவறாகவும் பயன்படுத்தி விடக்கூடாது.
இவ்வாறு ஜனனி அய்யர் கூறினார்.