வெங்காயம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் வெங்காயத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இந்த விலை கிடைக்கவில்லை என்பது தான் வேதனை.
தற்போது இந்தியா முழுவதுமே வெங்காயத்தை வைத்தே அரசியல் மட்டுமின்றி குடிநீர் குழாயடியிலும், டீ கடைகளிலும் கூட பேசப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சில கடைகளும் ஒரு பொருள் வாங்கினால், வெங்காயம இலவசம் என்று சொல்லி விளம்பரங்களும் செய்து கொள்வதுடன் செய்திகளாகவும் வெளிவருகிறார்கள். பல இடங்களில் மணமக்களுக்கு வெங்காய பொக்கே, வெங்காய மாலைகள் என்ற பரிசுகளும் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் டிசம்பர் 12 ந் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மகளிரணி சார்பில் முன்னதாக கொண்டாட திட்டமிட்டனர்.
கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான மெய்நின்றநாதர் சுவாமி ஆலயத்தின் முன்னால் கூடிய ரசிகர்கள் பிரமாண்ட சிவன் சிலை முன்பிலிருந்து தலைமைப் புலவர் நக்கீரர் சிலை அமைந்துள்ள நடைபாதை வழியாக பூ, பழம், இனிப்புகளுடன் வெங்காயத்தை தாம்பூலத்தில் வைத்து ஊர்வலமாக சென்று மெய்நின்றநாதர், ஒப்பிலாமணி அம்பிகைக்கு ரஜினி பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் வெங்காயத்தையும் சேர்த்து வழங்கி பிறந்த நாளை கொண்டடினர்.
இது குறித்து மாவட்டப் பொறுப்பாளர் ஏ.பி.டி சகாயம் கூறும் போது, "தலைவர் ரஜினி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டோம். வழக்கம் போல கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்து இனிப்பு வழங்கி கொண்டாடுவது போல, இந்த ஆண்டும் இனிப்புகளுடன் வந்தோம். ஆனால் தற்போது வெங்காயத்திற்காக மக்கள் படும் அவதியைப் பார்த்து இனிப்புகளுடன் வெங்காயத்தையும் சேர்த்து வழங்கலாம் என்று வெங்காயத்தையும் சேர்த்து வழங்கினோம்.
பொதுமக்களும் இனிப்புகளை விட வெங்காயத்தை முதலில் எடுத்துக் கொண்டனர். மேலும் இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தேவையான வெங்காயத்தை வழங்கி தலைவர் ரஜினிகாந்த் பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.