Skip to main content

நக்கீரன் நினைவில் மயில்சாமி - 02: “எத்தனை காலம் இருக்கப்போகிறோம் எனத் தெரியாது, அதுவரை மனிதனாக வாழலாம்” - நக்கீரனுக்காக அளித்த பேட்டி

Published on 19/02/2023 | Edited on 19/02/2023

 

actor Mylaswamy Interview for Nakkheeran

 

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

நக்கீரன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த மயில்சாமி நக்கீரன் யூ டியூப் தளத்திற்காக பேட்டி கொடுத்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன் கொரோனா அச்சங்கள் இருந்த காலத்தில் நாம் அவரை சந்தித்த பொழுது மிக உற்சாகமாகவே பேசினார். 

 

அதில், “மனிதனாகப் பிறந்தவன் இன்னொரு மனிதனுக்கு உதவியாக இருப்பது நல்லது. அதுதான் என் குணம். நான் நன்றாக இருந்தால் போதும், மற்றவனைப் பற்றி கவலை கிடையாது என்ற பழக்கம் எப்பொழுதும் எனக்கு கிடையாது. ஆனால், நிறைய இடத்தில் ஜாதி, மதம் இருக்கிறது. இதை எல்லாம் யார் கொண்டுவந்தார்கள். எங்கிருந்து வந்தது என அடிக்கடி யோசிப்பேன். ஒரு ஜாதிக்காரன் தவறு செய்திருந்தாலும் அதே ஜாதிக்காரன் அவனுக்கு ஆதரவு கொடுக்கிறார். தன் மதத்தைச் சார்ந்தவர்கள் யாராவது தவறு செய்தால் அந்த மதத்தினர் அவருக்கு ஆதரவு தருகின்றனர். தப்பு எந்த ஜாதிக்காரன் செய்தாலும் எந்த மதமுடையவர் செய்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும். 

 

தவறு செய்யும் சாமியார்களுக்கு தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா என எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. அதிகமானோர் தப்பு செய்துவிட்டு வெளியில் சுற்றிக்கொண்டு உள்ளனர். இதை நம் ஊரில் தான் பார்க்கிறேன். தவறு செய்வதற்கு முக்கிய காரணம் சந்தர்ப்பம். 

 

ஜெயலலிதா அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள். அவர்களைப் போல் யாராவது வாழ முடியுமா? அவருக்கு உடல்நிலை சரி இல்லை. மருத்துவமனையிலும் சிசிடிவி பதிவுகள் இல்லை என்கிறார்கள். போயஸ் கார்டனிலும் பதிவுகள் இல்லை என்கின்றனர். நம் ஊரில் உள்ள ஆளுநர், பிரதமர் யாராவது மருத்துவமனைக்கு நேரில் சென்றார்களா? ஜெயலலிதாவை நேரில் சென்று பார்த்ததாக சிலர் பொய்யாகச் சொன்னார்கள் தானே. அப்பொழுது உள்ளே ஏதோ ஒன்று நடந்துள்ளது. அது நமக்கு வெளியில் தெரியவில்லை. முதல்வருக்கே இந்த பிரச்சனை. நாம் எத்தனை காலம் இருக்கப்போகிறோம் எனத் தெரியாது. இருக்கும் வரை ஓரளவு மனிதநேயத்துடன் மனிதனாக இருக்கலாம்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்