கரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதில் காவல்துறையினரின் பணிகள் மெச்சத் தகுந்தவைகளாக இருக்கின்றன. எவ்வளவு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் வீதிக்கு வரும் மக்களிடம் கெஞ்ச வேண்டிய இடத்தில் கெஞ்சியும் லத்தியை சுழற்ற வேண்டிய தருணத்தில் சுழற்றியும் வேகம் காட்டி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குரிய பாதுகாப்பு கவசங்கள், ஊட்டச் சத்து பாணங்கள் பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது.
இந்த சூழலில், காவல்துறையினரின் பணிகள் மீது கொண்டுள்ள அக்கறையில் அவர்களுக்கான முக கவசங்கள், குளுகோஸ், சானிடைஷர் உள்ளிட்ட பொருட்களை அவர்களுக்கு கொடுத்து உதவியுள்ளார் ’ மெட்ரோ ‘ திரைப்பட ஹீரோ மெட்ரோ சிரிஷ்!
இதுகுறித்து அவரிடம் நாம் பேசியபோது, ‘’கரோனா கொடூரன் கண்களுக்குத் தெரிவதில்லை. கண்களுக்குத் தெரியாத அந்த வைரஸ் தொற்று மக்களிடம் பரவாமல் தடுத்து நம்மை பாதுக்காக்க 24 மணிநேரமும் கண் துஞ்சாமல் உழைக்கின்றனர் போலீஸார். அவர்களின் பணிகள் சாதாரணமானதல்ல! அவர்கள் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் சொல்லிட முடியாது.
அப்படிப்பட்ட காவல்துறையினருக்கு உதவும் வகையில் மருத்துவ பொருட்களையும், ஊட்டச் சத்து பொருட்களையும், கிருமிகளை கொல்லும் சானிடைஷர்களையும் கொடுக்க வேண்டும் என நினைத்தே இதனை செய்திருக்கிறேன். மிகவும் நெருக்கடியில் சூழலில் நாடு இருக்கிறது. நம்மையும் நாட்டையும் பாதுகாக்க காவல்துறையினர், மருத்துவர்கள், துப்புறவு தொழிலாளர்கள் என பலரும் அவரவர்கள் தரப்பில் போராடி வருகின்றனர். நம்மை பாதுக்காக்க உழைக்கும் அவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இதனை செய்திருக்கிறேன் ‘’ என்கிறார் நடிகர் மெட்ரோ சிரிஷ்.