புதுக்கோட்டையில் கரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும்' என அறிவித்தார்.
முதல்வரின் கரோனா தடுப்பூசி அறிவிப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,'நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்; எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்; இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்; ஐயா ஆட்சியாளர்களே, தடுப்பூசி என்பது உயிர்காக்கும் மருந்து. மருந்து என்பது அள்ளித்தெளிக்கும் வாக்குறுதி அல்ல; மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்டீர்கள். மக்கள் உயிருடன் விளையாடத் துணிந்தால் உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.