பள்ளி மாணவர்கள் பைக் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களில் மாணவர்கள் சென்ற இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி மாணவர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. பள்ளிக்கு பைக்கில் வரக்கூடாது என்ற உத்தரவையும் மீறி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்கு பைக்கில் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் சில இடங்களில் மாணவர்கள் பைக்கை அருகில் உள்ள கடைகளில் நிறுத்திவிட்டு பள்ளி முடிந்ததும் வீடுகளுக்கு எடுத்து சென்றுவிடுகிறார்கள். இதனால் கட்டுப்பாடு விதித்தும் மாணவர்களை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்று பள்ளிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பள்ளி மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு வருவது தொடர்பாகவும், பேருந்துகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்வதை பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், " மாணவர்கள் பேருந்தில் இடம் இருந்தாலும் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் நிலை இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். இதுதொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். இதுதொடர்பாக பேருந்து நடத்துநர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். அதைப்போல மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு வர கூடாது. அப்படி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை பள்ளிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்" என்றார்.