கரோனா பரவலைத் தடுப்பதற்காக 21 நாட்கள் 144 ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்களை வீடுகளில் இருக்கச்சொல்லி மத்திய – மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. அதேநேரத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க, பொதுமக்கள் வீட்டுக்கு ஒருவர் வெளியே வரலாம் எனச்சொல்லப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உள்ள இடங்களில்தான் கூட்டம் கூடும் என்றால், அசைவ பொருட்கள் விற்பனை கூடங்களிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
கூட்டம் அதிகம் இருந்த நிலையில், அங்கு சமூக விலக்கு கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறைச்சி வாங்க பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிக நெருக்கடி ஏற்படுவதால் அதற்கு என்ன செய்யலாம் என அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி,
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாரத்தில் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இறைச்சி கூடங்களை திறக்க வேண்டும் எனவும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் இயங்கும் இறைச்சிக் கூடங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிகளை தங்களது கடைகளில் சுத்தம் செய்துகொண்டு வந்து நகர பகுதிகளுக்கு வெளியே திறந்தவெளி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் இறைச்சி விற்பனைக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே அதனை விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி நகரப்பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கிராமப்புறங்களில் இறைச்சி கடை வைத்திருப்பவர்கள் தாங்கள் கடை வைத்துள்ள இடத்திலேயே விற்பனை செய்யலாம் எனவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி.
வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் உட்பட சில மாவட்டங்களில் ஏப்ரல் 14ந்தேதி வரை இறைச்சி கடைகளை மூடக் கூறி உத்தரவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.