சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் மற்றும் லால்கான் பள்ளிவாசல் வக்பு வாரியம் இணைந்து புதிய மதரஸா துவக்க நிகழ்ச்சி லால்கான் பள்ளி வாசலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் பல்வேறு முற்போக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனை அவருக்கு வாக்களிக்காதவர்களும் பாரட்டி வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்களும் பாராட்டி வருகிறார்கள். அவர் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறார்.
அதேபோல் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட நான் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறேன். தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் தமிழக முழுவதும் ரூ150 லட்சம் கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பு மற்றும் போலி பட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ளனர். இந்த சொத்துக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வக்பு வாரிய சொத்துக்களை மீட்பதில் தமிழக முதல்வர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். சொத்துக்களை மீட்டு மருத்துவக் கல்லூரி, கல்லூரி,பள்ளிகள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும். வக்பு வாரிய நிர்வாகத்தை கணினிமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு திங்கள் கிழமையும் வக்பு வாரிய ஆணையரை சந்தித்து குறைகளைக் கூறினால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பதிவு செய்யாத மசூதிகளை முறைப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் 9 ஆயிரம் மசூதிகள் உள்ளது. இதில் 3 ஆயிரம் மட்டுமே பதிவில் உள்ளது. அனைத்து மசூதிகளையும் சட்டப்படி கண்டிப்பாக பதிவு செய்துகொள்ள வேண்டும்'' என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் லால்கான் பள்ளிவாசல் நிர்வாகி ஜியாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.