அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் தேவைகள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் அனைத்திலும் கரோனா நோயாளிகள் நிரம்பிவருகின்றனர். அதேசமயம், படுக்கைகள் கிடைக்காமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் இருப்பதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துவருகிறது.
கோவை மாவட்டத்தில் கரோனா பரவல் அதிதீவிரமாக பரவிவருவதை அறிந்து இன்று (15.05.2021) கோவைக்கு விரைந்தார் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். அவருடன் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோரும் சென்றனர். அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்திய மா. சுப்பிரமணியன், நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள், படுக்கைகளின் நிலவரம், ஆக்சிஜனின் இருப்பு உள்ளிட்டவற்றை டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அதனையடுத்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
ஆய்வுகளுக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த மா. சுப்பிரமணியன், “கரோனா தடுப்பு பணிகளை தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்தியிருக்கிறோம். டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை அதிகம். ஆனால், அவர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு, கூடுதலாக 2,000 டாக்டர்கள், 6,000 செவிலியர்கள் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள், கரோனா தடுப்புப் பணியில் அமர்த்தப்படுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார் மா. சுப்பிரமணியன்.