ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அப்துல் ஜப்பார் கொலை வழக்கு உண்மை குற்றவாளிகளை கண்டறிய திருக்கோவிலூரில் அனைத்து கட்சி கூட்டம் கோரிக்கை எழுப்பப்பட்டது.
திருக்கோவிலூரில் அனைத்து கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் லட்சுமி பாலாஜி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தார். திமுக நகர செயலாளர் ஆர்.கோபிகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஏ.பசல் முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் வீர.விடுதலை செல்வன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் ஒய். அப்துல் ஜப்பார், எடப்பாளையம் ஜமாத் முத்தவல்லி ரசூல்கான், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. திருவெண்ணைநல்லூர் காவல் சரகத்திற்குட்பட்ட டி.எடப்பாளையம் கிராமத்தில் 27.6.2018 அன்று ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அப்துல் ஜப்பார் படுகொலை செய்யப்பட்டதை கண்டிப்பதோடு, இதில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை இக்கூட்டம் கேட்டு கொள்கிறது.
2. இக்கொலை சம்பவத்தை ஒட்டி விசாரணை என்ற பெயரில் எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அப்பாவி இளைஞர்களை காவல்துறை அழைத்து சென்று அடித்து துன்புறுத்துவதை கண்டிப்பதோடு இது குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க இக்கூட்டம் கேட்டு கொள்கிறது.
3. திருக்கோவிலூர் நகரில் நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் பாரபட்சமாக நடந்து கொள்வதை இக்கூட்டம் கண்டிப்பதோடு இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் மாற்று இடம் வழங்க இக்கூட்டம் கேட்டு கொள்கிறது.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் பஷீர் அகமது, மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவா, திமுக தொண்டரணி அமைப்பாளர் பூபதி தமுமுக நகர நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் எஸ். ஜகாங்கீர் நன்றி கூறினார்.