Skip to main content

ஆத்தூர் அருகே கடத்தப்பட்ட தொழில் அதிபர் விடுவிப்பு! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). பெட்ரோல் பங்க் மற்றும் கல் குவாரி தொழில் செய்து வருகிறார். ஜூன் 18, 2019ம் தேதியன்று மாலை, மல்லியக்கரையில் உள்ள தனது பெட்ரோல் பங்க்கில் இருந்து காரில் வீட்டிற்குச் சென்றார். 

தாண்டவராயபுரம் அருகே மோட்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சுரேஷ்குமாரின் காரை, பின்னால் வந்த ஒரு கார் வழிமறித்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கி வந்த மர்ம நபர்கள் சுரேஷ்குமாரை கடத்திச்சென்றனர். 

Abducted businessman released near Attur! police investigation!!


இதுகுறித்து தகவல் அறிந்த மல்லியக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து சுரேஷை தேடி வந்தனர். 

இந்நிலையில், சுரேஷை கடத்திய மர்ம நபர்கள் ஜூன் 19ம் தேதி இரவு, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டனர். அவர் அங்கிருந்து பேருந்து மூலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். சம்பவ இடம் மாவட்ட காவல்துறை எல்லைக்கு உட்பட்டது என்பதால், சுரேஷை காவல்துறையினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். எஸ்பி உத்தரவின்பேரில், சுரேஷை மல்லியக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

விசாரணையில், கர்நாடகா மாநிலத்தில் சுரேஷூம், அவருடைய தந்தையும் கிரானைட் மற்றும் பெட்ரோல் பங்க் தொழில் செய்து வருகின்றனர். இதையறிந்த மர்ம நபர்கள், அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவரை காரில் கடத்தியிருப்பது தெரிய வந்தது. 

மர்ம கும்பல் சுரேஷை கடத்திச்சென்று ஆளரவமற்ற ஒரு காட்டு பங்களாவில் அடைத்து வைத்து, சித்ரவதை செய்துள்ளனர். சேலம் அல்லிக்குட்டையைச் சேர்ந்த ரவுடிகள் யாராவது அவரை கடத்திச்சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்