Skip to main content

'பட்டத்தை துறக்கிறேன்...'-கமலின் திடீர் முடிவு

Published on 11/11/2024 | Edited on 11/11/2024
kamal haasan

தன்னை 'உலகநாயகன்' என்றோ அல்லது அடைமொழி பட்டங்கள் கொடுத்தோ அழைக்க வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'என் மீது கொண்ட அன்பினால் 'உலகநாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்களின் இந்த அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றி உணர்வும் உண்டு. சினிமாக் கலை எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்த கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிமாணம் அடையவே விரும்பும் ஒரு மாணவன் தான் நான்.

பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்து தான் சினிமா உருவாகிறது. கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பதுதான் என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைமண்ணளவு என்பதை உணர்ந்தவனாகவும் தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.

அதனால் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர  நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதை குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றை துறப்பது என்பது அது. எனவே என் மீது பிரியம் கொண்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். வரும் காலத்தில் என் ரசிகர்களும், ஊடக நண்பர்களும், திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மையம் கட்சி தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ  KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்