Skip to main content

பிரபல ஹோட்டலில் சாப்பிட்ட சிறுமி பலி... ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

aarani restaurant child incident police investigation

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ளது பிரபலமான 7 ஸ்டார் ஹோட்டல். அசைவ உணவகமான இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு சாப்பிடுவர். கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி இரவு பலரும் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்படி சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளர். அதில் 10 வயது சிறுமி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆரணியை அடுத்த தந்தரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி பிரியதர்ஷினி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோசினி என 4 பேரும் பிரபலமான 7 ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்று பிரியாணியும், தந்தூரி சிக்கனும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த சிறிது நேரத்திலேயே வாந்தியெடுத்து மயக்கமடைந்துள்ளனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

 

இதேபோல் ஆரணி பையூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் அவரது மனைவி சந்தியா, 4 வயது குழந்தை பிரணவ், ஆரணியைச் சேர்ந்த ஜாகீர் அவரது மகள் 4 வயது பாத்திமா, யாகூப், சீனுவாசன், விஷ்ணு, திலகவதி, சரவணன், செங்கம் தாலுக்கா காராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பயணிகளான தமிழரசன், மோனிகா, கார்த்திகா, லோகேஷ் போன்றோரும் இந்த ஹோட்டலில் அதேநாளில் அதேநேரத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். இவர்களும் வாந்தியெடுத்து, மயக்கமாகியுள்ளனர். இவர்களும் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதில் ஆனந்த், பிரியதர்ஷினி, சரண் 3 பேரை வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். லோசினிக்கு மட்டும் ஆரணியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமி அக்டோபர் 10ஆம் தேதி அன்று மதியம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டது. இது ஆரணி மற்றும் சுற்றுவட்டார மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து புகார் வந்ததும் ஆரணி கோட்டாச்சியர் கவிதா அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்துள்ளார். ஆரணி டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் மருத்துவமனையில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். உணவு பாதுகாப்பு அலுவலர்களும் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

உணவு சாப்பிட்டவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டதும் ஹோட்டல் உரிமையாளர் சம்மந்தப்பட்டவர்களிடம் பேரம் பேசி விவகாரத்தை அமுக்கியுள்ளனர். குழந்தை இறந்ததாலே இந்த விவகாரம் பெரியதானது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்