திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்றவர்களாக சுற்றித்திரிந்தவர்களை மீட்க திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவினர், காவல் ஆய்வாளர்கள், மாவட்ட சமூக நல அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு கடந்த 1ஆம் தேதி மற்றும் 2ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில், 64 ஆண்களும் 20 பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்கப்பட்ட அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான உரிய பாதுகாப்பும் சிகிச்சையும் தற்போது அளிக்கப்படுகிறது.
அதில் திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 பேரும், நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக 17 பேரும் பெரம்பலூரில் 9 பேரும் திருவாரூரில் 8 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலர், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களோடு பேசி பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், மற்ற அனைவரையும் காப்பகங்களில் வைத்து உரிய சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது.