கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில் பரந்து விரிந்த வனக்காடுகள் உள்ளன. இந்தக் காட்டுப் பகுதியில் தொடர்ந்து அவ்வப்போது வன விலங்குகளை வேட்டையாடி, அதன் மாமிசங்களை விற்பதாக காவல்துறைக்கும் வனத்துறைக்கும் ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து திருக்கோவிலூர் காவல் துறை டி.எஸ்.பி. ராஜி, மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உலகநாதன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நெடுமுடையான் துறிஞ்சப்பட்டு வனப்பகுதியில் 8 பேர் கொண்ட கும்பல் கையில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். ஆனால், போலீசார் அவர்களை துரத்திச் சென்றுபிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம், ஐயப்பன், ஏழுமலை, கதிர்வேல், சக்திவேல், முத்துலிங்கம், கேசவன், ராஜா ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்து திருக்கோவிலூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
பின்னர், அவர்களிடமிருந்த மாமிசம் மட்டும் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட வனப் பகுதிகளில் வாழும் வனவிலங்குகளை இரவு, பகல் என பாகுபாடில்லாமல் வேட்டையாடும் கும்பல், அவ்வப்போது காவல்துறையிடமும் வனத்துறையிடமும் சிக்கி வருகிறார்கள்.