தர்மபுரி அருகே வகுப்பறை பாடங்களைச் செய்யாததால் ஆசிரியர் ஒருவர், எல்லா மாணவர்கள் முன்னிலையிலும் கண்டித்ததால் அவமானம் அடைந்த ஏழாம் வகுப்பு மாணவிகள் இருவர், பள்ளியில் இருந்து திடீரென்று ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி அருகே பிரபலமான ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். மார்ச் 9ம் தேதியன்று மதியம், வழக்கம்போல் உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. உணவு அருந்திய பிறகு மாணவ, மாணவிகள் அவரவர் வகுப்புகளுக்குத் திரும்பினர். மதிய வேளையிலும் வருகைப்பதிவேடு எடுப்பது வழக்கம்.
இந்நிலையில், 7ம் வகுப்பு படித்து வரும் காரிமங்கலம், பாலக்கோடு பகுதிகளைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மட்டும் வகுப்பிற்குத் திரும்பாதது தெரியவந்தது. அதேநேரம் அவர்களின் புத்தகப் பைகள் மட்டும் வகுப்பறையில் இருந்தது.
இதுகுறித்து அந்த வகுப்பு ஆசிரியர், பள்ளி முதல்வரிடம் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த நிர்வாகத்தினர், பள்ளி ஊழியர்கள், ஆசிரியர்களை அனுப்பி பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். அவர்கள் சென்ற இடம் குறித்த தகவல் இல்லை. இதையடுத்து பள்ளி நிர்வாகம், மாணவிகள் மாயமானது குறித்து அவர்களுடைய பெற்றோர்களுக்கு மதியம் 3.30 மணியளவில் தகவல் அளித்திருக்கிறது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்து நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அவர்கள் பள்ளி முன்பு சாலை மறியல் போராட்டத்திலும் இறங்கினர். நிலைமை மோசமாவதை உணர்ந்த பள்ளி நிர்வாகமே இதுகுறித்து தர்மபுரி நகர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெற்றோர்கள், உறவினர்களை சமாதானப்படுத்தினர். மேலும், மாணவிகளை கண்டுபிடித்து ஒப்படைக்கிறோம் என்றும் உறுதி அளித்தனர்.
காவல்துறை விசாரணையில், மாயமான இரு மாணவிகளும் வகுப்பறை பாடங்களை ஒழுங்காகச் செய்யாமல் இருந்துள்ளதும், இதற்காக அவர்களை ஆசிரியர் கண்டித்துள்ளார் என்பதும், அதன்பிறகே அவர்கள் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மின்னல் வேகத்தில் களம் இறங்கிய காவல்துறையினர் பள்ளியைச் சுற்றியுள்ள கிராமங்களில் விசாரித்தனர். அப்போது கிராம மக்கள் சிலர் பள்ளி மாணவிகள் இருவரை பார்த்ததாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், குண்டலப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி அருகே இரு மாணவிகளும் நடந்து சென்று கொண்டிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவர்களை மீட்டு அழைத்துவந்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது மாணவிகளிடம் விசாரித்தபோது, வகுப்பறை பாடங்களைச் சரியாக செய்யாததால் மாணவர்கள் எல்லோர் முன்னிலையிலும் ஆசிரியர் அடித்ததாகவும், அதனால் ஏற்பட்ட அவமானத்தில், வகுப்பறையிலேயே புத்தகப்பைகளை வைத்துவிட்டு, இருவரும் பள்ளியின் சுற்றுச்சுவரை தாண்டிக் குதித்து வெளியே சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, நடந்த விவரங்களை மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் எழுதி பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அவர்களுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம், சிபிஎஸ்இ பள்ளி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.